லீடர்: மாஸ் ஆக்ஷன் மெகா எண்டர்டெயின்மென்ட்

தூத்துக்குடியில் மெக்கானிக் வேலை செய்யும் சக்திவேலுக்கு(லெஜண்ட் சரவணன்) மகள்தான் உலகம். ஆனால் மகளுக்கோ தந்தை மீது வெறுப்பு. என்றாலும் அங்கிள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மகளுடன் வாழ்கிறார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படும் கார்களை பழுதுநீக்கி கொடுப்பதுதான் சக்திவேலின் முக்கியமான வேலை. துறைமுகத்தில் ஒரு நாசகார வேலையை செய்ய வில்லன்கள் கூட்டம் திட்டமிடுவதை அறியும் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போராடுகிறார். அதற்காகத் தினமும் துறைமுகத்திற்கு வந்து போகும் சக்திவேலிடம் உதவி கேட்கிறார். ஆனால், வாடிக்கையாளருக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென ஆன்ட்ரியாவின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் சக்திவேல்.

ஆனாலும் வில்லன்கள் கூட்டம் சக்திவேல் ஆண்டரியாவிற்கு உதவுவதாக கருதிக் கொண்டு அவரது மகளை கடத்துகிறது. அதுவரை பூனையாக இருந்த சக்திவேல் புலியாக மாறி புறப்படுகிறார். உண்மையில் சக்திவேல் யார்? அவர் மகளே அவரை வெறுப்பது ஏன்? தூத்துக்குடி துறைமுகத்தில் வில்லன்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது மீதி படம். விஜய், அஜீத் படங்கள் போன்று ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படத்தை தந்திருக்கிறார். துரை செந்தில்குமார்.

மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக இருந்து காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இடம் என மாஸ் ஹீரோ அம்சங்கள் நிறைந்த சக்திவேல் கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன் மிரட்டி இருக்கிறார். கார்ப்பரேட் வில்லனாக சந்தோஷ் பிரதாப், திடமான உடல் தோற்றம், ரக்கெட் லுக் எனத் தன் கதாபாத்திரத்துக்கு ) நியாயம் செய்திருக்கிறார்.

நேர்மையான காவல் அதிகாரிகளாக ஷ்யாம், ஆண்ட்ரியா. நாயகி பாயல் ராஜ்புட் மூவருமே ஆக்ஷனிலும், ஆக்டிங்கிலும் பட்டைய கிளப்புகிறார்கள். விடிவி கணேஷ் சிரிக்க வைக்கிறார்.
பரபர ஆக்ஷன் களத்தை ப்ரேமுக்குள் அடக்கி பிரமாண்ட விஷுவல்களாகத் திரையில் ஏற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்..ஜிப்ரான். பின்னணி இசை ஆங்காங்கே பவரைக் கூட்டுகிறது.

செவித்திறன் கருவியைக் கொண்டு வரும் ஐடியா, வலது புறம் இதயம் இருக்கும் பிரச்னையை லாஜிக்காகப் பயன்படுத்தியது, இறுதியில் அடுக்கப்படும் ட்விஸ்ட்கள் போன்றவை க்ளைமாக்ஸை வந்தே பாரத் ரயிலாகத் தடதடக்க வைத்திருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.