விளையாட்டு படங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை அதுவே ஆபத்தும், ஒரு இயந்திரத்திற்கும் மனிதனுக்குமான பிணைப்பாக இருந்தால் இன்னும் சுவாரஸ்யமானது. அந்த வகையில் பைக்ரேஸை அடிப்படையாக கொண்ட இந்த படம் இளைஞர்களின் கொண்டாட்ட படமாக வந்துள்ளது.
இந்திய சினிமாவில் அரிதாக அல்லது ஒருவேளை ஒருபோதும் ஆராயப்படாத மோட்டோகிராஸ் விளையாட்டு, இப்படத்திற்கு ஒரு புதிய பொலிவைத் தருகிறது. அதிநவீன ஒலி-ஒளிக் காட்சியமைப்பும், பாராட்டத்தக்க நடிப்பும் இப்படத்தை மிகவும் ஈர்க்கக்கூடியதாக ஆக்குகின்றன.
1990கள், 2000கள் மற்றும் அவ்வப்போது 80களுக்கு இடையே பயணிக்கும் கதை. பழம்பெரும் பைக் ரேசரான டாக்டர் ராஜசேகரரெட்டி தனது மகனையும் தன்னைப்போல ரேசராக்க பயிற்சி அளிக்கிறார். ஆனால் காதலில் விழுந்து, திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொள்ளும் மகன் ரேசில் இருந்து விலகி நிற்கிறார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்போது மீண்டும் ரேசில் குதிக்கிறார். இந்த முறை வெற்றி கண்டாரா என்பதுதான் படத்தின் கதை. 90களில் டூ-ஸ்ட்ரோக் பைக்குகள் கோலோச்சியதிலிருந்து, 2000-களில் ஃபோர்-ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு மோட்டோகிராஸ் உலகில் ஏற்பட்ட மாற்றம், ஒரு பைக் ஓட்டுநர் தன்னை நிரூபித்துக் கொள்ள எவ்வாறு தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு எடுத்துக்காட்டுகிறது.
ஏராளமான பந்தயத் தருணங்களும், நம்பமுடியாத ஒரு துணிச்சலான சாகசமும் இருந்தாலும், மிக முக்கியமான தருணங்களில் அந்தத் துணிச்சலான செயலை ஒரு கதைசொல்லும் கருவியாகப் பயன்படுத்தும் விதத்தில்தான் இதன் நேர்த்தியான அம்சம் அமைந்துள்ளது.
ஜிப்ரானின் பின்னணி இசை, ஒவ்வொரு தசாப்தத்திலும் வெவ்வேறு வேகம் மற்றும் தாளத்துடன் பயணிக்கிறது. அதிக உணர்ச்சிப்பூர்வமான சவால்களைக் கொண்ட ஒரு கதைக்கு, அதன் நடிகர்களிடமிருந்து சிறந்த ஆதரவு கிடைக்கிறது. ஷர்வானந்த் மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியதைக் ‘பைக்கர்’ படம் காட்டுகிறது.
ஒரு வலுவான கதையும் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்ட நிலையில், அவரது நிதானமான நடிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து, மாளவிகா நாயர் தன் கண்களின் வழியே அமைதியாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார், டாக்டர் ராஜசேகர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அமைதியாக நடித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘பைக்கர்’ ஒரு சுவாரஸ்யமான, முக்கியமான திரைப்படம்.