டிரிப், தூக்குத்துரை படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. விஒய்ஓஎம் என்டர்டெர் யின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் குஷி ரவி இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் செல்வராகவன் மனைவியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துத் ள்ளனர். ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த படத்துகு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது இதில் நடிகை குஷி ரவி பேசுகையில், “மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கொரு நல்ல இடத்தை ரசிகர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குனர், நடிகர் செல்வராகவன் பேசுகையில்,
“முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து “இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க?” என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்தபோது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.
இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.
அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.
கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.
அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி — அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த energy எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும்.
மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி என்றார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில்,
வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார்.
இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் corporate வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.
பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோலதான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.
ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது — நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன.
இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.
எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.
இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.
இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி.
கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி-கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது.
Y.G. மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை.
செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.
இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் — இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது.
இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.