ஏளனம் செய்தவர்கள் முன்னால் எழுந்து நிற்கிறேன்: ‘ஏழு கடல் ஏழு மலை’ விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கம்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. ‘பறந்து போ’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம். நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதை தொடர்ந்து படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது: எனக்கு குறிப்பிட்ட சில இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும், காரணம் என் ரசனை அந்த மாதிரி. அந்த வகையில் ‘தரமணி’ படம் நடந்த சமயத்தில் இயக்குநர் ராமை சந்தித்துப் பேசினேன். ஆனாலும் அவரை வைத்துப் படம் எடுக்கும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லையோ என எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது. அந்த சமயத்தில் ‘நீ சின்ன தயாரிப்பாளர் தானே?’ என்று என்னை சிலர் ஏளனமாகப் பேசியதைக் கேள்விப்பட்டு, நடிகர் சிம்பு தானாகவே முன்வந்து கால்ஷீட் கொடுத்து ‘என் படத்தைத் தயாரியுங்கள்’ என்று கூறினார். வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்கியதால்தான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.
அந்த சமயத்தில் ராம் அண்ணனிடம் இருந்து ஒரு கதை வந்தது; என்னைத் தேடி வந்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’.
நானும் எஸ்.ஜே. சூர்யா சாரும் தான் இந்தக் கதையைக் கேட்டோம். எனக்கு கதை பிடித்திருந்ததை விட இயக்குநர் ராமுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் இருந்தது. சிலர் ‘இவனிடம் பணமே இல்லை, இவன் எப்படி படம் எடுக்கப் போகிறான்’ என்று கூட வதந்திகளைப் பரப்பினார்கள். அப்போது அவரிடம், ‘அண்ணே, இதுவரை 10 படங்கள் எடுத்திருக்கிறேன்; ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டில் பணம் இல்லை என்று படம் நின்றதே இல்லை. என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே அதைக் கணக்கிட்டுப் படத்தையே துவங்குவேன்’ என்றேன்.
ஹீரோ நிவின்பாலி என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷம், ‘பிரேமம்’ படத்தில் இருந்தே அவரைப் பிடிக்கும். அதன்பிறகு சூரி வந்தார்.. கதாநாயகி என்கிறபோது கேட்கவே தேவையில்லை, அஞ்சலியிடம் ஒரு போன் காலிலேயே சம்மதம் வாங்கி விட்டோம். ராம் அண்ணன் படம் என்பதால் குட்டி இசைஞானி யுவன் சங்கர் ராஜாவும் எங்கள் படத்திற்குக் கிடைத்தார்.
இந்தப் படத்தில் இப்போது கடைசிக் கட்ட வேலை வரை இயக்குநர் ராம் தான் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இன்னும் எத்தனை படம் வேலை செய்வது என்றாலும் எனக்கு சந்தோசமே.
இந்தப் படத்தை ‘ஆழி பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கி ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் வெளியிடுகிறது. கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. தெலுங்கில் சுப்பா ரெட்டியின் கலர் அண்ட் கலர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கர்நாடகாவில் டிடி என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. ஓவர்சீஸ் உரிமையை ட்ரிபுள் எம் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. என்றார்.