விஜயுடன் இணைந்து பணியாற்றத் தயார்: முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார் பேட்டி

திரைப்பட மக்கள் தொடர்பாளர், பத்திரிகையாளர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்டவர் பி.டி.செல்வகுமார். விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரது உதவியாளராக இருந்து அவரது வளர்ச்சிக்கு பாடுபட்டவர், இதனால் விஜய் அவர் நடித்த புலி படத்தின் தயாராப்பாளராக்கினார்.

பின்னர் பி.டி.செல்வகுமார் விஜய்யிடமிருந்து பிரிந்து வந்து கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் 10வது ஆண்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் அவர் 10 பெண்களுக்கு இலவச ஆட்டோ வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பத்திரிகையாளராக இருந்து, நடிகர் விஜய்க்கு பி ஆர் ஓ’வாக இருந்து, அவரது வளர்ச்சிக்காக 27 வருடங்கள் உழைத்து, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதோடு நின்று விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்வதற்காக கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கினோம்.

தொடங்கியபோது இவரால் என்ன செய்துவிட முடியும் என்றெல்லாம் கேலி கிண்டல் செய்தவர்கள் உண்டு. அப்படியான பேச்சுக்களையெல்லாம் கடந்து 10-வது வருடத்திற்கு வந்துள்ளோம். 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய உதவித் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக மலையோர, பழங்குடி கிராம மக்களுக்கு சென்று சேரும்படி பார்த்துக் கொள்கிறோம்.

கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடகாலம் தொடர்ச்சியாக நாங்கள் செய்த உதவிகளைப் பாராட்டி, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் எனக்கு ‘மனிதநேயச் செம்மல் விருது’ தந்தார்கள்.

அதன்பிறகு, நெல்லை மாவட்ட சுற்று வட்டாரத்தில், மலைக் கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், கலையரங்குகள் கட்டிக் கொடுத்துள்ளோம். அந்த சேவையைப் பாராட்டி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் எனக்கு ‘சிறந்த கல்வி சேவையாளர் விருது’ வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.

இதோ இப்போது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அந்த நிகழ்வை சிறப்பாக நடத்த முடிவெடுத்து பெண்களின் உழைப்புக்கு மதிப்பளித்து ஏழை எளிய ஆட்டோ ஓட்டுநர் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்குவதென தீர்மானித்து செயல்படுத்தியிருக்கிறோம்.
தமிழ்நாடு முதல்வர் தலைமையேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு சென்று வந்துள்ளேன் என்றால், அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அது சாதரணமாக நடந்துவிட வில்லை.

சவால்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் கடந்துதான், வியர்வையும் ரத்தமும் சிந்தி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். எதுவுமே சும்மா வந்து விடாது. ஒவ்வொரு செயல்பாட்டுக்கு பின்னேயும் கடுமையாக உழைத்திருக்கிறேன். பெரியளவில் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். இனியும் சவால்களைச் சந்திக்க, மக்கள் நலனுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யத் தயராக இருக்கிறேன். இந்த எங்களின் சமூக சேவை பணிகள் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக தொடரும்.

‘விஜய்யின் கட்சியோடு கூட்டணி வைப்பீர்களா?’ என்று கேட்டபோது ”காலச் சுழல் கூடி வந்தால் இணைந்து செயல்படலாம். விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” என்றார்.

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் பற்றி கேட்டதற்கு, ”விஜய் இனிவரும் நாட்களில் தனக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கு சரியான நேரத்துக்கு போவது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.