“தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் ” என்று நம் நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது தேசியத் தலைவர் ஊமை விழிகள் படத்தை இயக்கிய அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை தொடங்குகிறது. தன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் தேவர். ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிரித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். மதுரை வைத்தியநாத அய்யருடன் இணைந்து ஹரிஜன மக்களுக்கு ஆலய பிரவேசம் நடத்துகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பார்வேர்ட் பிளாக் கட்சியில் சேர்க்கிறார். சுதந்திரம் கிடைத்த பின்பு பலவேறு சமூக சார்ந்த பணிகளை மேற்கொள்கிறார்.
ஒரு சிறிய பிரச்சனையால் இமானுவேல் சேகரன் என்பவர் கொலை செய்யப்படுகிறார். அரசியல் சூழ்சியால் இந்த கொலையில் முத்துராமலிங்க தேவர் சிக்க வைக்கப்படுகிறார். இந்த அரசியல் பழியை எதிர்த்து தேவர் சட்ட போராட்டம் நடத்துகிறார். இப்படி முத்து ராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இந்த படம் வந்துள்ளது
முத்து ராமலிங்க தேவராக பஷீர் சரியாக பொருந்தி போகிறார். தோற்றத்திலும், நடிப்பிலும் தேவராகவே நடமாடுகிறார். நீண்ட முடியும் திருநீறு நெற்றியுடன் முத்துராமலிங்க தேவராக வாழ்ந்து காட்டி உள்ளார்.
நேதாஜி சுபாஷ் உயிருடன் வந்துவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு உருவ அமைப்பில் ஒத்து போகிறார் நேதாஜியாக நடித்தவர். அதோடு காந்தி, நேரு காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தோற்றத்தில் நடித்தவர்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
சில குறைகள் இருந்தாலும், தேவரைப் பற்றி அறிந்து கொள்ள இளைய தலைமுறை பார்க்க வேண்டிய படம்.