ராதிகா சரத்குமாரின் அதிரடி ஆட்டம்தான் தாய்கிழவி. அவரின் சினிமா வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்து விட்டது. தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் அவரை நோக்கி வர இருக்கிறது.
படத்தின் கதை: உசிலம்பட்டி கருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனுத்தாயி(ராதிகா). கிராம மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து அதைக் கறாராக வாங்கும் கெத்தான பெண். ஊரே அவரை பார்த்தால் அலறி அடித்து ஓடும். அவருக்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என மூன்று மகன்கள், ரெபேகா ஒரு மகள். மகன்கள் மூவரையும் விரட்டி விட்டு வாழவெட்டியாக இருக்கும் மகளோடு தனியாக வாழ்க்கிறார்.
கெத்தாக வாழ்ந்த பவுனு தாயி ஒரு நாள் பொத்தென படுக்கையில் வீழ்கிறார். ஏற்கனவே சொத்துக்காகக் காத்திருக்கும் மகன்கள், மீதி பவுனுக்காகக் காத்திருக்கும் மகளின் கணவன் உடன் வட்டிக்குப் பணம் வாங்கிவிட்டு இருக்கும் ஊர்மக்கள் பலர் என சுற்றி உட்கார அடுத்து என்ன என்பது மீதிக்கதை.
ராதிகாதான் முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறார். மருதுவமனையில் படுக்கையில் கிடந்தாலும் அவர்தான் படத்தை சுமந்து செல்கிறார். தேசிய விருதுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதை நடிப்பின் மூலம் உறுதி செய்திருக்கிறார்.
குடும்ப சண்டைகள், மருமகள், மாமியார் சலசலப்புகள், காமெடி கலாட்டாக்கள், வெள்ளந்தியான ஜனங்கள், என படத்தை யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு ஆடியன்சையும் கருமாத்தூரில் வாழ வைக்கிறது,
காமெடி படம் என்றாலும் பெண் சுதந்திரம், அவர்களுக்கான சேமிப்பு, கட்டாய வேலை போன்ற மெசேஜ்களையும் சொல்கிறது படம். மார்ச் 8ம் தேதி மகளிர் தினம், அதற்கு முன்பே அவர்களுக்கான படமாக, அவர்கள் சார்பில் பேசும் படமாக வந்திருக்கிறாள் தாய்கிழவி. படத்தை தயாரித்துள்ளள சிவ கார்த்திகேயனுக்கு ஒரு ராயல் சல்யூட்.