விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ என்கிற வெப் தொடர், இன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். இந்த தொடரை காக்கமுட்டை, கடைசி விவசாயி படத்தை இயக்கிய மணிகண்டன் படத்தின் எடிட்டர் அஜீத் குமார் இயக்கினார். இந்த நிலையில் இதன் அறிமுக விழா நடந்தது. இதில் விஜய்சேதுபதி பேசியதாவது:
இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான்.
இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத, அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் ‘ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்’ என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது.
ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். இதுபோல் பலர் என்னை நம்பியதால்தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன்.
மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகுதான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.
2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் . மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.
ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று ‘உடன் பால்’ படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன்.
நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
=========