பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது
இந்த நிலையில் படம் குறித்து பேட்டி அளித்த அர்ஜுன் தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.
இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது,” என்று கூறினார்.
இதுவரை தான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான் என்றார். ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்.
நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயார். தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும். பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
.