சதுரங்க விளையாட்டு போட்டியின் மிக உயர்ந்த இடம் ‘கிராண்ட் மாஸ்டர்’. அந்த இடத்தை வறுமையில் வாடும் ஒரு துப்புரவு தொழிலாளியின் மகன் எப்படி அடைகிறான் என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
அபர்னதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த துடிப்பான பெண். கிராமங்களில் விளையாடப்படும் ஆடுபுலி ஆட்ட விளையாட்டில் திறமைசாலி. ஒரு முறை ஒரு உயர்ஜாதி உள்ளூர் தலைவனை அந்த விளையாட்டில் தோற்கடிக்க, அவர்களின் பகையாளியாகிறாள். பின்னர் சதுரங்க விளையாட்டை கற்று அதில் சாதிக்கிறாள். ஆனால் ஜாதி வெறியாளர்கள் அவளது காதல் கணவனை கொன்று அவளையும் துரத்தி அடிக்கிறார்கள்.
இதனால் சென்னை வரும் அவள் துப்புரவு பணி செய்து தன் ஒரே மகனை படிக்க வைக்கிறாள். ஆனால் அவனுக்கோ சதுரங்க விளையாட்டில்தான் ஆர்வம். தான் இழந்த ஒன்றை தன் மகனை வைத்து எப்படி செய்விக்கிறாள் என்பது படத்தின் மீதி கதை.
மொத்த படத்தையும ஒத்த ஆளாக சுமந்து நிற்கிறார்அபர்னதி. இன்றைக்கு எந்த ஹீரோயின்களும் நடிக்க தயங்கும் ஒரு கேரக்டரில் துச்சலுடன் நடித்ததுடன அசாத்திய திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பல விருதுகள் அவருக்காக காத்திருக்கிறது. அவரது மகனாக நடித்திருக்கும் லிங்கேசும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். வெற்றி செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு ஆகியோர் தங்கள் இருப்பை பதிவு செய்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, ஜாதி வெறிக்கு அவர்கள் பலியாகும் விதம் ஆகியவை சினிமாவிற்கு புதிதில்லை என்றாலும், சதுரங்க விளையாட்டின் பின்னணியில் அதனை சொல்லி கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வெற்றிச்செழியன். தரமான இயக்குநர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பார். தினேஷ் அந்தோணியின் பின்னணி இசையும், அர்ஜுன் ரவி, குணசேகரனின் ஒளிப்பதிவும் கிராண்ட் மாஸ்டரின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கிராண்ட் மாஸ்டருக்கு கொடுக்கலாம் ஒரு பூங்கொத்து.