சிறுவயதில் தன் தாய் இன்னொருவனுடன் ஓடிப்போய் விட்டதால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பில் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். குடும்ப வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் கோபிகா ரமேஷ். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, கர்ப்பமாகிறார் கோகா. திருமணம் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் என்கிறார் ரியோ ராஜ், இரண்டும் வேண்டும் இல்லாவிட்டால் இரண்டுமே வேண்டாம் என்கிறார் கோபிகா. முடிவு என்ன என்பது படம்.
காதலியைப் புரிந்துகொள்ளாமல் தேவையில்லாத கோபம், ஆக்ரோஷம், கெத்து, ரொமான்ஸ் , உறவுகள் மேல் விரக்தி, காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறல் என அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார் ரியோ ராஜ். பதற்றம், காதல், கோபம், ஆற்றாமை, அழுகை என எந்நேரமும் உணர்ச்சிகளோடு மல்லுக்கட்டும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி, படத்திற்குத் தூணாக நின்று வலுசேர்த்திருக்கிறார் கோபிகா ரமேஷ்.ரீயோ ராஜின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், காமெடியன் வேலையை கச்சிதமாக செய்கிறார்.
பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கலர்புல் காக்டெய்ல். ‘மார்டன் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா இசையிலும், குரலிலும் ‘கதவைத் திறந்தாயே’ பாடல் மனதை கவர்கிறது. கிளைமாக்சில் பின்னணி இசையிலேயே அனைத்து உணர்வுகளையும் கடத்தி விடுகிறார்.
எதிரெதிர் குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை இணைக்கும் எமோஷனலான கதையை, கலகலப்பான திரைக்கதையாலும், திரைமொழியாலும் சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.