1980களில் பாரதிராஜா சொன்ன காதலுக்கு நவீன காலத்து முடிவொன்றை கொடுத்து புதுமையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நவீன் டி கோபால்.
தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் இருக்கும் சித்தூரில் வசிக்கும் தமிழ் குடும்பம் நாயகன் டீஜய் அருணாசலத்துடையது. அப்பா செந்தி, அப்பா கிரேன் மனோகர், நல்ல நண்பர்கள் என மகிழ்ச்சியான வாழ்க்கை. அந்த ஊருக்கு, அதுவும் நாயகன் வீட்டுக்கு எதிரில் புதிதாக குடிவருகிறார் நாயகி ஜனனி. அவரது அம்மா கண்டிப்பு மிக்க மந்த்ரா.
நண்பர்களுடனான ஒரு போட்டியால் ஜனனியை காதலிப்பது போல் நடிக்க முயற்சி செய்து நிஜமாகவே காதலில் விழுகிறார் டீஜெய். ஆனால் ஜனனியின் கண்டிப்பு மிக்க அம்மா மந்த்ரா இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் அம்மா எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்வார்கள், அல்லது தற்கொலை செய்வார்கள், அல்லது ஊரை விட்டு ஓடுவார்கள். ஆனால் இந்த கதையில் நடப்பது வேறு, அது என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.
அறிமுக நாயகன் டீஜய் அருணாசலம் மண்ணுக்கேற்ற முகத்துடன் இருக்கிறார். அறிமுகம் என்பது தெரியாத அளவிற்கு நேர்த்தியாக நடித்திருக்கிறார், பிக் பாஸ் ஜனனி இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அழகாகவும் இருக்கிறார், நடிக்கவும் செய்கிறார். ஒரு ரவுண்ட் வரலாம்.
பல வருடங்களுக்கு பிறகு மந்த்ரா ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அதிர்ச்சி ஏற்படுத்தும் கேரக்டர் அவருக்கு, நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஆதித்யா கதிரும், தங்துரையும் சிரிக்க வைக்கிறார்கள். பாவல் நவனீதன் நாயகனின் நண்பனாகவும், கதை சொல்லியாகவும் வருகிறார்.
சித்தூரின் அழகை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய். நல்ல திறமையாளர். இவரும் இந்த படத்திற்கு பிறகு ஒரு ரவுண்டு வருவார். கிரண் ஜோசின் இசை கதைக்கு இசைவாய் அமைந்திருக்கிறது.
நேர்த்தியான, அழகான காதல் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என்று ஏங்குகிறவர்களுக்கு ‘உசுரே’ காதலை உணரவைக்கும்.