தீபாவளியை ‘டியூட்’டுடன் கொண்டாடுங்கள்: பிரதீப் ரங்கநாதன் வேண்டுகோள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், நிகேத் பொம்பி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயசங்கர் இசை அமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது.

விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, “உங்களில் ஒருவனான என்னை மேடையேற்றியதற்கு நன்றி. சரத் சார் இந்தப் படத்தை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த ஹீரோ உடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவருடைய வயசும் எனர்ஜியும் எனக்கு பயங்கர இன்ஸ்பிரேஷன்.

‘லவ் டுடே’ படத்திற்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தபோது மமிதாவை ஒரு ஷார்ட் ஃபிலிமில் பார்த்தேன். ‘லவ் டுடே’ படத்திற்காக அவரை முயற்சி செய்தபோது அவர் ‘வணங்கான்’ படத்தில் பிசியாக இருந்ததால் பிடிக்க முடியவில்லை. ஆனால், ‘டியூட்’ படத்தில் மமிதா தான் நடிக்கிறார் என கீர்த்தி சொன்னபோது சர்ப்ரைஸ் ஆக இருந்தது.

இதுவரை பார்க்காத மமிதாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள். நேஹாவும் அற்புதமாக நடித்துள்ளார். டிராவிட், ரித்து, ரோகிணி மேம் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக கீர்த்தி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவரை என் தம்பி போலதான் பார்க்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு என்னை பாடவும் வைத்த சாய் அபயங்கருக்கு நன்றி. தீபாவளியை ‘டியூட்’ படத்துடன் கொண்டாடுங்கள்”. என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரதீப் ரங்கநாதன். “தாலிக்கு பெரிய செண்டிமென்ட் இருந்தாலும் அதற்கு பின்னால் அதை அணியும் பெண்ணின் உணர்வும் இருக்கிறது என்பதை சொல்லும் படம். இன்றைய காதலும், திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை ஒரு கமர்ஷியல் பேக்கேஜோடு சொல்கிறோம்.

என்னை பற்றி வரும் உருவ கேலிகளை நான் பெரிது படுத்துவதில்லை. என்னை நேசிக்கிறவர்களுக்கு என்னை பிடித்திருக்கிறது. நான் எளிய தோற்றத்தில் இருப்பதால்தான் மக்களில் ஒருவனாக அவர்களோடு நிற்கிறேன்” என்றார்.
விழாவில் படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர், வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.