சாவீ: காணாமல் போன பிணமும், காமெடியும்

சாவு வீடுகளை பின்னணியாக கொண்ட பல காமெடி படங்கள் சமீபத்தில் வெளிவந்தது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம் இது. விபத்தில் இறந்து போன ஒருவரின் பிணம் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அசந்து தூங்கிய நேரத்தில் பிணம் காணாமல் போகிறது. அது எங்கே போனது? யார் எடுத்தார்கள், எதற்காக எடுத்தார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம்.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் படத்தின் நாயகன் உதய் தீப். தனது இரு மாமன்களும் தனது தந்தையை கொன்றதாக நினைத்து, அவர்களை பழிவாங்க காத்திருக்கிறார் உதய் தீப். ஒரு மாமனின் மகளை அவர் தீவிரமாக காதலிக்கிறார். உதய் தீப்பிற்கும் காணாமல் போன பிணத்துக்கும் என்ன தொடர்பு என்பது இன்னொரு டுவிஸ்ட்.

காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக ஆதேஷ் பாலா மிடுக்காக நடித்திருக்கிறார். கவிதா சுரேஷ் நாயகியாக வந்து போகிறார். இவர்கள் தவிர யாசர், மாஸ்டர் அஜய், பிரேம் கே.சேஷாத்ரி ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பூபதி வெங்கடாசலத்தின் ஒளிப்பதிவும், சரண் ராகவன், விஜே ரகுராம் ஆகியோர், பின்னணி இசையும் படத்திற்கு உதவி இருக்கிறது. பிணம் காணாமல் போய்விட்டது என்ற ஒன் லைனை வைத்துக்கொண்டு, போதை கலாச்சாரத்தால் இன்றைய இளைய தலைமுறையை எப்படி சீரழிக்கிறது என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இயக்குனர் ஆண்டனி அஜித்தை பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.