சம்பள பாக்கி இல்லாமல் படத்தை முடித்தோம்: ரெட் லேபிள் தயாரிப்பாளர், நடிகர் பெருமிதம்

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ‘ரெட் லேபிள்’. கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் கதாநாயகனும் தயாரிப்பாளருமான லெனின் பேசியதாவது:

இயக்குநர் பொன் பார்த்திபன் என்னிடம் கூறிய இரண்டு கதைகளில் என் பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் நாலைந்து கதாநாயகிகள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள்.

இந்த கதாநாயகியின் படம் வந்து கொண்டே இருந்தது . இவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் .மீண்டும் மீண்டும் அவரது போட்டோவைக் காட்டினார்கள். முகத்தை கழுவி விட்டு செல்ஃபி எடுத்து ஒரு போட்டோ அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவரும் அப்படியே அனுப்பி இருந்தார் .அவர் தேர்வாகி விட்டார். உண்மையைச் சொன்னால் இந்த படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். இதற்கு முன்பு நாங்கள் ஒரு சாதாரண தலைப்பையே வைத்திருந்தோம்.

இயக்குநருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மிகவும் பொறுமைசாலியாக இருந்து அனைத்தையும் சமாளித்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று பொறுமை காட்டினார் . அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .சொன்னது போல் படத்தை எடுத்து முடித்து விட்டார் .

எனக்கு எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும். நானும் எனது தரப்பில் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுத்து விடுவேன். யாருக்கும் பாக்கி வைப்பதில்லை.பணம் இருந்தால் படப்பிடிப்பு நடத்துவோம்.பணம் இல்லாவிட்டால் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவோம். யாருக்கும் பாக்கி வைக்க மாட்டோம்.

ஆர்.வி.உதயகுமார் சார் பற்றி இங்கே சொல்ல வேண்டும். அவர் இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவாவதற்கு முன்பாகவே அவர் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே எனக்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பெப்சியிலும் பேசி பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். அந்த உதவியை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயமாக பார்க்கும் படியாக இருக்கும். திருப்தி தரும் படமாக இருக்கும் என்பதற்கு நான் 100 சதவிகிதம் உத்திரவாதம் தருகிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.