ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.” யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் இயக்குனர்கள் சுசீந்திரன், வசந்தபாலன், கரு.பழனியப்பன், விநியோகஸ்தர் குகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் யோகி பாபு பேசியதாவது: இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி” என்றார்.
இந்நிகழ்வில், நடிகர் யோகி பாபு சொன்னது போல், அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.