போலீஸ் பேமிலி: லாக்அப் டெத்தின் இன்னொரு முகம்

சென்னையை ஆட்டிப்படைத்த தாதா பருத்தி வீரன் சரவணன், தன் மகனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு மதுரையில் அமைதியான வாழ்ந்து வருகிறார். தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மகனுடன் ரகசியமாக வாழ்கிறார்.

திடீரென்று ஒரு நாள் அவரது மகனை கஞ்சா கடத்தியதாக கைது செய்கிறது போலீஸ். லாக்அப்பில் கடுமையாக தாக்கப்படும் அவன் மயக்க மடைய அவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக போட்டு வந்து விடுகிறது, போலீஸ். மறுநாள் அவனை யாரோ கொடூரமாக கொலை செய்கிறார்கள். ஆனால் தன் மகனை போலீஸ்தான் கொன்றதாக கருதும் சரவணன், மகன் சாவுக்கு காரணமா 4 போலீசாரின் குடும்பங்களை பழிவாங்குகிறார். ஆனால் உண்மையில் மகனை கொன்றது யார்? எதற்காக என்பது மீதி கதை.

லாக்கப் டெத் கதைக்களத்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக பாலு.எம் இயக்கியுள்ளார். இதுபோன்ற படங்களில் இறந்தவர்கள் பக்கம் நின்று பேசிய சினிமா முதன் முறையாக போலீசின் பக்கம் நின்று பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் ராஜா மலைச்சாமிதான் கதை நாயகன். தன் இரு மகள்களை வில்லன்களிடமிருந்து பாதுகாக்க அவர் நடத்தும் போராட்டம் நெகிழ்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆக்ரோஷமான கேரக்டருக்கு சரவணன் பொருத்தமாக இருக்கிறார்.

காமெடி இல்லாமல் குணச்சித்திர நடிப்பை வழங்கியுள்ளார் ‘காதல்’ சுகுமார். ஏ.எம்.ராஜா மலைச்சாமி, சுரேகா.ஆர், நிஷா துபே, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா ஆகியோர் கேரக்டருக்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர். கொடைக்கானலை புதிய கோணங்களில் ஜெயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையை ஜெயா கே.தாஸ் வழங்கியுள்ளார். போலீஸ் கதைகளில் புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.