மலையாளத்தில் ஹிட் அடித்த படத்தை நேர்த்தியாக தமிழில் உருவாக்கி தந்திருக்கிறார்கள். அதற்காக முதலில் பாராட்டை தெரிவித்து விடலாம். நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், கால்பந்து விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கிராமப்புற சிறுவர்கள் குழுவைச் சுற்றி நகர்கிறது. பெரிய அளவில் கனவு காண்பதற்கான திறமையும் ஆர்வமும் அவர்களிடம் இருந்தாலும், ஒரு முறையான விளையாட்டு மைதானம் இல்லாதது தான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களின் உதவியோடு, தங்களது பயிற்சிக்குத் தேவையான ஒரு இடத்தை உருவாக்க அந்த சிறுவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவதற்கான எளிய முயற்சியாகத் தொடங்கும் ஒன்று, ஒரு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்போது படிப்படியாக தீவிரமான ஒரு இலக்காக அது எப்படி மாறுகிறது என்பதுதான் படம். தோல்வியை வெற்றியாக பார்ப்பது எப்படி என்பதையும் படம் அழுத்தமாக சொல்கிறது.
கிராமத்து சிறுவர்களின் நட்புதான் படத்தின் பலம். அவர்களின் உரையாடல்கள், கேலி கிண்டல்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் அவர்கள் ஒன்றுபட்டிருக்கும் தருணங்கள் அனைத்தும் மிகவும் இயல்பாக அமைந்துள்ளன. அவர்களை வெறும் கால்பந்து கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரங்களாக மட்டும் காட்டாமல், கால்பந்து மைதானத்திற்கு வெளியே உள்ள அவர்களின் வாழ்க்கை மற்றும் உறவுகளுக்கும் இந்த படம் போதிய முக்கியத்துவத்தை அளிக்கிறது.
கதையின் நாயகன் இஸ்மாயிலாக வரும் ஆண்டனி வர்கீஸ் (தனது சுறுசுறுப்பான நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம். விஜயனின் வருகை படத்திற்கு மற்றொரு சுவாரஸ்யமான பரிமாணத்தை சேர்க்கிறது. கால்பந்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் இளைஞர்களுக்கு அவர் பயிற்சியாளராக வருவது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. நிஜ வாழ்க்கையில் அவருக்கு இருக்கும் கால்பந்து அனுபவம், விளையாட்டு மற்றும் பயிற்சி சார்ந்த காட்சிகளுக்கு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்குகிறது.
‘7 ஸ்டார் பாய்ஸ்’ ஜாலியான படமாக இருந்தாலும், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களது பெரிய லட்சியங்களை முடக்கிவிடக் கூடாது என்ற மெசேஜையும் சொல்கிறது.