ஆர்யன்: விஷ்ணு விஷாலின் வெற்றிப் பாய்ச்சல்

‘ராட்சசன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். சரியான சமூக அங்கீகாரம் இல்லாததால் விரக்தியடையும் எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்), ஒரு முன்னணி தொலைகாட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கு நடக்கும் ஒரு விவாத நிகழ்ச்சியை ஹைஜாக் செய்கிறார்.

நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஒரு இளம் நடிகரை துப்பாக்கியால் சுடுகிறார். தான் எழுதிய கதையின்படி அடுத்த 5 நாட்களில் 5 கொலைகளை தான் செய்ய இருப்பதாகவும், அதில் ஒரு கொலை இப்போதே இந்த அரங்கிலேயே நடக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
தற்கொலை செய்து கொண்டவர் எப்படி மீதி 4 கொலைகளை செய்ய முடியும் என்பதுதான் படத்தின் கதை.

செல்வராகவன் யார்? அவர் ஏன் இத்தனை கொலைகளை செய்ய வேண்டும் என்பதை போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் கண்டுபிடிப்பதுதான் திரைக்கதை.

சீரியல் கில்லர் , சைக்கோ த்ரில்லர் படங்கள் என்றாலே ஒரே மாதிரியான கதைகளை எடுத்துத் தள்ளும் சூழலில் ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்த இயக்குநர் பிரவீனை பாராட்டுக்குரியவர். படம் தொடங்கி செல்வராகவனின் அறிமுகமானதுமே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டு விடுகிறது. அவர் டிவி ஸ்டுடியோவுக்குள் நுழையும் காட்சி தொடங்கி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் வரையிலான காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் இதுவரை சினிமாவில் காட்டப்படாதவை. இவை முழு படத்தின் மீதும் பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

ஒவ்வொரு கொலை நடப்பதும், அதற்கு முன்பு செல்வராகவன் தோன்றும் இடங்களும் மீண்டும் ‘த்ரில்’ அனுபவங்களுக்கு உத்தரவாதம் தருகிறது. கொலைக்காக செல்வராகவன் சொல்லும் காரணம் இதுவரை சொல்லப்படாத ஒன்று.

குடும்ப வாழ்வில் தடுமாறும் கணவனாகவும், நூல்பிடித்து கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரியாகவும் நேர்த்தியான பணியை செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். செல்வராகவன் கதாபாத்திரமும் அதன் வடிவமைப்பும் அற்புதம். முதல் காட்சியிலேயே இறந்து போனாலும், படம் முழுக்க அவருடைய தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்படியான திரைக்கதை அபாரம்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு டிவி தொகுப்பாளராக கனமான கதாபாத்திரம். விஷ்ணு மனைவியாக வரும் மானசா சவுத்ரிக்கு பெரிதாக வேலையில்லை. கணவன் மனைவிக்கு இடையிலான பிரிவுக்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை.

கிருஷ்ணன் வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கிறது. விஷ்ணு விஷாலின் வெற்றிப்பட வரிசையில் இந்த படமும் இணைகிறது.

Leave A Reply

Your email address will not be published.