சென்னை புறநகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 4வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம்.
ஐடி ஊழியர் ஆரி அர்ஜூனன், அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்த காதலியும், அவரது மகளும் திடீரென்று மாயமாகின்றனர். அவர்களை தேடி போலீசிடம் செல்லும் ஆரி அர்ஜூனனுக்கு இரவு நேர கனவில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இந்நிலையில், மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆரி அர்ஜூனன், காதலியை தேடும்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன? காதலி கிடைத்தாரா? கனவில் கண்ட சம்பவங்கள் நிஜவாழ்க்கையில் நடந்ததா என்பது மீதி கதை.
கனவுகள் மனிதனுக்கு இயல்பானவை, இந்த கனவுகள் எதன் அடிப்படையில் உருவாகிறது. அது நிஜ வாழ்க்கையோடு தொடர்புடையதா என இதுவரை தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் கனவை நிஜத்தோடு தொடர்புபடுத்தி மர்டர் மிஸ்ட்ரி ஜார்னரில் உருவாகி உள்ளது படம்.
மனநிலையும், மர்மமும் கலந்த சைக்காலஜிக்கல் திரில்லரில் கனவுகளுக்கும், நிஜவாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டி.
ஆரி அர்ஜூனன் இயல்பாக நடித்திருக்கிறார். மகள் பாசத்தில் உருவ வைக்கிறார். நாயகி தீப்ஷிகா கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். வில்லனாக சுப்பிரமணியம் மற்றும் பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோரும் படத்திற்கு உதவி இருக்கிறார்கள். த்ரில்லர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
=====