சினிமாவில் இருப்பதே ஒரு சாதனைதான். கலை இயக்குநர் வீரசமர்

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் ‘வெயில்’, ‘பூ’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’, ‘கொம்பன்’ போன்ற படங்களில் நடிகராகவும் முகம் காட்டியவர்.அமலாபால் முதலில் அறிமுகமான ‘வீரசேகரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு.

அண்மையில் வீரசமரைச் சந்தித்துப் பேசிய போது…

உங்களுக்குள் சினிமா ஆர்வம் எப்படி வந்தது? சற்றே உங்களது முன் கதையைச் சொல்ல முடியுமா?

நான் பிறந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் அய்யனார்குளம் கல் கொண்டம்பட்டி கிராமம்.அப்பா கிட்டப்பா, அம்மா பாலம்மாள்.பாப்பாப்பட்டி,உசிலம்பட்டி அரசுப் பள்ளிகளில் படித்தேன்.ஊரில் இருக்கும் போது சினிமா என்றால் நடிகர்கள் முகம் தான் ஞாபகம் . அனைவரும் சென்னை வருவது நடிப்பது என்பதை ஒரு கனவாகவே நினைப்பார்கள்.அப்படி சினிமா நடிகர்களின் முகங்கள் மூலம் தான் சினிமா எனக்குள் அறிமுகமாகி உள்ளே நுழைந்தது.நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகனாக இருந்தேன்.

எனக்கு ஓவியம் கலை என்று ஆர்வம் இருந்ததால் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தேன். குறிப்பாக சிற்பக் கலையில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.அதையே பிரதான பாடமாக எடுத்தேன்.ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகு சினிமா பற்றி புரிதலும் தெளிவும் எனக்கு ஏற்பட்டது.நாம் போக வேண்டிய பாதை கலை இயக்கம் என்று தோன்றியது:ஓவியக்கல்லூரியில் படித்த போதே கலை இயக்குநர் சாபுசரில் அவர்களிடம் அறிமுகம் ஏற்பட்டு, படித்து முடித்ததும் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.அப்போது நான் மிகவும் மெலிந்த தோற்றத்தில் சின்ன பையனைப் போல் தெரிவேன்.முதலில் நான் அவரை போய்ப் பார்த்தபோது என்னை ஏற இறங்கப் பார்த்தவர் , “நீ நினைப்பது போல் கலை இயக்கம் சுலபமான விஷயம் அல்ல.நீ கிராமத்தில் இருந்து வந்திருக்கிறாய்.இது உனக்குச் சரியாக வராது, மிகவும் கஷ்டப்பட வேண்டும் போராட வேண்டும்” என்றெல்லாம் சொன்னார்.

பின் என்னுடைய கலை சிற்ப ,ஓவியங்கள் ஆல்பங்களைப் பார்த்துவிட்டு மனம் மாறினார் .பிறகு என்னிடம் ஒரு நிபந்தனை விதித்தார் ..”நீ என்னிடம் சேர்ந்தால் ஐந்தாண்டுகள் பணி புரிய வேண்டும். அப்படி இடையில் போய்விட்டால் என்னிடம் உதவியாளராக இருந்தேன் என்று என்னுடைய பெயரை யாரிடமும் சொல்லக்கூடாது” என்று சொன்னார் .அதன்படிச் சம்மதித்து அவரிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதற்குள் 50 ஆண்டுகள் பணியாற்றியது போன்ற அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன.

அவரிடம் கமல் சாரின் ‘ஹேராம்’ ,ஷங்கர் சாரின் ‘பாய்ஸ்’,மணிரத்னம் சாரின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ பிரியதர்ஷன் சாரின் ‘சினேகிதியே ‘ போன்ற பெரிய பெரிய படங்களில் பணி புரிந்தேன். ‘பாய்ஸ்’ படத்தின் போது அங்கே பாலாஜி சக்திவேல் சார் பணி புரிந்தார். அடுத்த படத்திற்காக அவர் என்னை அழைத்தார்.அப்படி நான் முதன் முதலில் ஆர்ட் டைரக்ஷன் செய்த படம் தான்’ காதல்’. அன்று முதல் இன்று ‘DSP’ வரை தொடர்ச்சியாகக் கலை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறேன். வேலை இல்லாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

நீங்கள் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரமாண்டமான அரங்க அமைப்புகள் கொண்ட படங்கள் அமையவில்லையே ஏன்?

நாம் விரும்பிக் கொண்டிருப்பது சினிமாவில் உடனே கிடைத்த விடும் என்று சொல்ல முடியாது.அதே நேரம் செட் போட்டு அரங்கு அமைத்தால் தான் ஆர்ட் டைரக்ஷன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆர்ட் டைரக்ஷன் இருக்கிறது. வெளிப்புறப் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் கூட கலை இயக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது யாருக்கும் தெரியாது .பல காட்சிகளில் இயல்பாகத் தெரியும் தோற்றங்கள் செயற்கையான முறையில் கலைஇயக்குநர் உருவாக்கியதுதான். அது வெளியே தெரியாது. நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்.

‘காதல்’ படத்தில் பரத் இருக்கும் மெக்கானிக் ஷெட் கூட நான் உருவாக்கியதுதான். வசந்த பாலன் சார் இயக்கிய ‘வெயில்’ படத்தில் கிளைமாக்ஸில் வரும் அந்த வெட்ட வெளிக் கோயில், மணிகள் எல்லாமே செட் போட்டு நான் அமைத்தது தான். ஆனால் ஏதோ இயற்கையாக அமைந்த கோவில் மாதிரித்தெரியும். அந்த படப்பிடிப்பு நடந்த பிறகு கூட பலரும் சாலையில் செல்பவர்கள் அதைக் கும்பிட்டு விட்டுச் சென்றதைப் பார்த்தபோது யதார்த்தத்துக்குக் கிடைத்த வெற்றியாக உணர்ந்தோம்.பாண்டிராஜ் சாரின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் உன் கூடவே பொறக்கணும் பாடலுக்கான பின்புலக் காட்சிகள் எல்லாம் எங்களால் அமைக்கப்பட்டது தான்.இப்படி நிறைய உண்டு. அண்மையில் பொன்ராம் சார் இயக்கத்தில் வெளிவந்த ‘டிஎஸ்பி’ படத்தில் ஏராளமான செட்களை போட்டுள்ளோம்.போலீஸ் கதை என்பதால் அதற்காக நிறைய நேரம் செலவிட்டு அமைத்தோம்.

உங்கள் குருநாதர் சாபுசிரில் பற்றி?

அவர் மாபெரும் திறமைசாலி அவர் ஒரு பசுபிக் பெருங்கடல் போல் ஆழமாக இருப்பதால் அமைதியாக இருப்பவர். நான் அவரிடம் கற்றுக் கொண்டது ஏராளம்.
அவர் ஹாலிவுட்டிற்கு நிகராக உலகத் தரத்தில் கலை இயக்கம் செய்யத் தெரிந்தவர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.’பாகுபலி’ போன்ற பிரமாண்ட படங்கள் என்றும் அவர் புகழைப் பேசிக் கொண்டிருக்கும்.
இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அவ்வளவு எளிமையானவர்.
படப்பிடிப்பு நேரங்களில் வணக்கம் சொல்வது போன்ற சம்பிரதாயங்கள் அவருக்குப் பிடிக்காது .வேலையை பாருங்கள் என்பார்.
அவர் இனிமேல் நீ தனியாக ஆர்ட் டைரக்டர் ஆகலாம் என்று என்னை ஊக்கப்படுத்தியவர். என்னுடைய வளர்ச்சி ஒவ்வொன்றையும் அவர் கவனித்து வருகிறார் அதற்காக மகிழ்ந்து பாராட்டுவார், வாழ்த்துவார்.

இதுவரை சவாலாக அமைந்த கலை இயக்கம் எது?

ஒவ்வொரு பட வாய்ப்பையும் நான் ரசித்து விரும்பித்தான் செய்கிறேன். விரும்பிச் செய்வதால் சிரமம் தெரிவதில்லை.சாமி சார் இயக்கிய ‘சரித்திரம் ‘என்றொரு படம் ராஜ்கிரண், ஆதி நடித்தது. முந்தைய காலத்துக் கதை. நிறைய சிரமப்பட்டுப் பணியாற்றினோம் .அதில் நான் நல்ல வேடமேற்று நடித்திருப்பேன். என் நடிப்பை ராஜ்கிரண் சார் கூட பாராட்டினார்.படம் வந்தால் நல்ல பெயர் கிடைக்கும்.அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.

ஒரு கலை இயக்குநருக்கு எது தேவை?

முதலில் நிறங்கள் பற்றிய அறிவும் தெளிவும் வேண்டும். நிறங்களின் சேர்மானம் பற்றிய கற்பனை வேண்டும்.ஒரு கலை இயக்குநருக்கு உற்று நோக்கும் திறமை தேவை. எப்போதும் எல்லாவற்றையும் உற்றுநோக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு குப்பைத்தொட்டி இருந்தால் கூட அதை உற்று நோக்க வேண்டும். மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொண்டே வர வேண்டும் .இப்படி உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் மனிதர்களின் குணச்சித்திரங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருக்கவேண்டும்.
ஒரு காட்சி எடுக்கப்படும் போது ஒவ்வொரு கட்டத்திலும் திரையில் தோன்றும் பொருள்கள், உடைகள்,தெரியும் நிறங்கள் அனைத்தையும் கவனித்து அது காட்சியாக வெளிப்படும் போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை யோசித்து அதன்படி பின்புலங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

பாடல் காட்சி என்றால் அதன் வரிகள் சொல்வது என்ன? பேசும் காட்சி என்றால் பாத்திரங்களின் மனநிலை என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற நிறங்களையும் பின்புலங்களையும் அமைக்க வேண்டும் .இப்படி சினிமாவில் ஒவ்வொரு ஃபிரேமிலும் இருப்பது தான் கலை இயக்கம்.ஒரு கலை இயக்குநர் வாழும் தோறும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

நடிகர் ஆனது எப்படி?

முதலில் என்னை தனது ‘காதல் ‘படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் .

அதில் நான் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்து இருப்பேன். அவசரமாக என்னை முதலில் நடிக்க வைத்தது அப்படியே தொடர்ந்து எனக்குப் பல படங்களில் நடிப்பு வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டன. ‘அதன் பிறகு ‘வெயில்’, ‘பூ’ , ‘பாண்டி’, ‘வீரசேகரன்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘வேலாயுதம்’,
‘ஒரு கிடாயின் கருணை மனு’
‘கொம்பன்’ , ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று தொடர்ந்து ‘DSP’ வரை பல பட வாய்ப்புகளில் நடித்திருக்கிறேன்.நடிப்பைப் பொறுத்தவரை அன்புச் சகோதரர்கள் சீமான்,பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சசி, பாண்டிராஜ், ராசுமதுரவன், மோகன்ராஜா, முத்தையா, பொன்ராம் போன்றவர்கள் கொடுத்த வாய்ப்பையும் ஊக்கத்தையும் மறக்க முடியாது.

கலை இயக்கம் ஒருபுறம் நடிப்பு ஒரு புறம் என்றிருப்பது திசை மாற்றாதா?

சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞராக எவ்வளவு படங்களில் வெளிப்படுத்தினாலும் வெளியே தெரியாது. ஆனால் படங்களில் முகம் காட்டிய பிறகு நம்மைப் பலருக்கும் தெரிகிறது. அது ஒரு வகையான மகிழ்ச்சி.
இருந்தாலும் நான் கலை இயக்கத்தை எந்த நாளும் விட மாட்டேன் .அதேபோல நடிப்பு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வேன்.

நடித்ததில் திருப்தி தந்தது எது?

ராசு மதுரவன் சார் இயக்கிய ‘முத்துக்கு முத்தாக’ படம் என்னைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது. அதேபோல் சசி சார் இயக்கிய ‘பூ’வில் கதாநாயகியின் அண்ணனாக நடித்திருப்பேன் .அதுவும் பட்டிதொட்டிக்கெல்லாம் என்னைக் கொண்டு சேர்த்தது. அதற்காக எனக்கு கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ஒரு விருதே கொடுத்தார்கள்.

நான் பரத், விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், மாதவன், பசுபதி, ராஜ்கிரண், லாரன்ஸ் என்று பிரபல கதாநாயகர்கள் அனுபவம் உள்ள நடிகர்கள் எனப் பலருடனும் நடித்திருக்கிறேன். அனைவரும் என்னுடன் அன்பாகப் பழகுவார்கள் எனக்கான காட்சிகளை விரிவாகக் தரச் சொல்வார்கள்.எனக்குக் கூடுதல் வசனங்களைக் கொடுத்து பேசச் சொல்லும் அளவிற்கு பெருந்தன்மையாகவே என்னிடம் நடந்து கொண்டார்கள்.

இப்போது பணியாற்றும் படங்கள்?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,’காடுவெட்டி’ படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அண்ணன் சேரனின்’ ஜர்னி’ என்கிற இணையத் தொடரிலும் பணியாற்றி இருக்கிறேன்.
இவை வெளியாக இருக்கின்றன.’சிதைவுகள்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன் மேலும் சில படங்களில் நடித்து வருகிறேன்.

சினிமாவில் உங்களுக்கான அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?

2004 இல் ‘காதல்’ படம் வெளி வந்தது .அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக நான் கலைஇயக்குநராக இயங்கிக் கொண்டே இருக்கிறேன். ஒருபோதும் ஓய்வாக இருந்ததில்லை. என் பணியில் நான் காட்டும் ஆர்வமும் ஈடுபாடும் தான் அடுத்தடுத்து வாய்ப்புகளை எனக்குப் பெற்றுத் தருகின்றன. எனக்கான சான்றிதழ்களை என் வேலை தான் தேடிக் கொடுக்கிறது.

காதல் படத்தில்ஒரு மெக்கானிக் ஷெட்டை உருவாக்கி இருப்பேன். அதில் தான் ஹீரோ பரத் இருப்பார். என்னை ஒருநாள் ஷங்கர் சார் அழைத்துப் பாராட்டினார்.படத்தில் அந்த மெக்கானிக் ஷெட்டில் டயருக்குள் கடிகாரம் இருப்பது போல் அமைத்திருந்தேன். அதை மிகவும் பாராட்டியதுடன் கையில் ஒரு கவரைக் கொடுத்தார்.வெளியே வந்து பார்த்தபோது அதில் 25 ஆயிரம் ரூபாய் இருந்தது. நான் பிரமித்து போனேன்.

‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வெளியான பிறகு சூர்யா சார் என்னை ஒருநாள் அழைத்தார்.படத்தில் எனது பணிகளைப் பாராட்டியவர், ஒரு கவரைக் கொடுத்தார். அதில் பார்த்தால் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி இருந்தது .அதேபோல் 2டி தயாரிப்பாளர் ராஜா எங்கள் வீட்டிற்கு, தட்டு நிறைய பழங்கள் கொடுத்து அனுப்பினார். அது ஒரு வெள்ளித்தட்டாக இருந்தது .இப்படி சொல்ல நிறைய உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்த சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே ஒரு சாதனை தான் என்று சொல்வேன்.

உங்கள் குடும்பம் பற்றி?

என் மனைவியின் பெயர் சோபியா .அவரை நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.
எம்.ஏ.மாஸ் கம்யூனிகேஷன் படித்தவர். என்னுடன் பணி புரிகிறார். எனக்கு ஐந்து வயதில் வரகுணன் என்கிற மகனும் இரண்டரை வயதில் மந்திரா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாள் ஞாபகம் ஒன்று?

எங்கோ கடைக்கோடி கிராமத்திலிருந்து நான் சென்னை வந்து கலை இயக்குநராகி இருப்பதே ஒரு பெரிய கனவு போல் பிரமிப்பாக இருக்கிறது.
கல்கொண்டம்பட்டி, பாப்பாபட்டி, உசிலம்பட்டி என்று மூன்று ஊர்களில் எனது பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டியிருந்தது .உயர்நிலைப் பள்ளிக்கு 15 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இப்படித்தான் படித்தேன்.

என் தந்தை இலக்கிய ஆர்வம் உள்ளவர் .பெரியார், அண்ணா, கலைஞர் மீது விசுவாசம் உள்ளவர்.அவர்களுடன் கட்சி ரீதியாகப் பயணங்கள் மேற்கொண்டவர்.முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவர். அதனால்தான் எங்களுக்கு, சாமி பெயரோ சாதிப் பெயரோ வெளிப்படும்படி பெயர் வைக்கவில்லை. எனது அக்காக்களுக்கு கோமதி, சங்கமித்திரை என்று பெயர் வைத்தார். அண்ணனுக்கு செந்தண்மண் என்றும் தங்கைக்கு தமிழ் ஓசை என்றும் பெயர் வைத்தார். எனக்கு வீரசமர் என்று வைத்தார்.

ஒரு காலத்தில் எங்கள் குடும்பம் பிழைப்புக்காக நாகப்பட்டினம் போனபோது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் கலை இயக்குநர் கங்காவின் வீடு இருந்தது.
பிற்காலத்தில் நான் கலை இயக்குநராக ஆனபோது அப்பா அதைக் கூறி நினைவு படுத்தினார். எனக்கு வியப்பாக இருந்தது.

‘ஹேராம்’ படத்தில் நாங்கள் உதவியாளர்கள் பணி புரிந்தோம்.அப்போது எங்களுக்குப் படப்பிடிப்பு நாட்களில் சாப்பாடு கிடைக்கும் .சம்பளம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை. அப்படித்தான் ஓராண்டாக உழைத்துக் கொண்டிருந்தோம் .ஒரு நாள் எங்கள் சாபு சார் கேட்டார். உனக்கு சம்பளம் வருகிறதா? என்று. சாப்பாடு போதும் என்கிற மனநிலை அப்போது எங்களுக்கு.இல்லை என்றேன். அப்போது ஐம்பது ரூபாய் சம்பளம் கொடுக்கச் சொன்னார்.அந்த ஐம்பது ரூபாய் சம்பளம் பெரிய காசாக அப்போது தோன்றியது .அதைக் கொண்டு வந்து நானும் என் அறை நண்பனுமான இயக்குநர் சீனு ராமசாமியும் கொண்டாடினோம். இப்படிப் படத்தில் பணிபுரிந்த ஓராண்டில் எங்களுக்கு மூன்று நாள்தான் சம்பளம் கிடைத்தது. அத்துடன் அந்தப் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஆக அந்தப் படத்தில் எனக்கு கிடைத்த சம்பளம் 150 ரூபாய். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் கிடைத்த அனுபவம் எத்தனை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று இப்போது தோன்றுகிறது.

இன்னொரு வேடிக்கையும் விசித்திரமுமான விஷயம் உள்ளது. நான் அன்று முதல் இன்று வரை தீவிர ரஜினி ரசிகன்.ஆனால் நான் முதன் முதலில் கமல் சார் படத்தில்தான் வேலை பார்த்தேன்.கமல் சாரின் படப்பிடிப்பில்தான் நான் முதல் சினிமா சாப்பாடு சாப்பிட்டேன். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் பணியாற்றி விட்டேன். ஆனால் என் அபிமான ரஜினி சார் படத்தில் இன்னும் பணியாற்றவும் இல்லை. அவரை இன்னும் சந்திக்கவுமில்லை.நினைத்தால் இது வேடிக்கையாக இருக்கிறது.ஒரு நாள் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.