தலைவன் தலைவி: குடும்ப கொத்து புரோட்டா

மதுரையில் அசைவ மெஸ் நடத்தி வருகிறது விஜய் சேதுபதியின் குடும்பம். அவரது மனைவி நித்யா மேனன், தாய் தீபா, தந்தை பருத்தி வீரன் சரவணன், மாமனார் செம்பன் வினோத்.
தீராத காதலும், அன்பும் கொண்ட விஜய்சேதுபதி, நித்யாமேனனின் வாழ்க்கையில் அவரை சுற்றி இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் திருவிளையாடல்களும், அதனால் இருவருக்குள்ளும் வரும் சண்டையும், சமாதானமும்தான் படத்தின் கதை.

சிறிய இடைவெளிக்கு பிறகு பாண்டிராஜ், காரம், மணம், குணம் நிறைந்த புரோட்டா விருந்து படைத்திருக்கிறார். கோவிலில் நடக்கும் குழந்தைக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியின் பின்னணியில் அழகான கதை சொல்லி இருக்கிறார்.

ஆகாச வீரனாக விஜய் சேதுபதி. தன் மனைவியிடம், `நான் பேசல மேடம், நான் பேசல மேடம்’ எனக் கத்துவதாகட்டும், கோபித்துக்கொண்டு செல்லும்போது கெஞ்சுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் திமிறிக்கொண்டு நிற்பதாகட்டும் ஆகாச வீரனாகவே வாழ்ந்திருக்கிறார்.

`நானா பாத்து கல்யாணம் பண்ணினேன். நீங்கதான கூட்டிட்டு வந்திங்க’ எனப் பெற்றோரிடம் மல்லுக்கட்டிவிட்டுக் கிளம்பிச் செல்வது தொடங்கி, கட்டை பையை எடுத்துக்கொண்டு அடிக்கடி கிளம்பிவருவது வரை ஆகாச வீரனின் பேரரசியாக இதுவரை தான் நடித்திடாத கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார், நித்யா மேனன். தனது ஒன்லைனர்களால் ஆடியன்ஸ் மனதை பிரதிபலிக்கிறார் யோகி பாபு.

சரவணன், செம்பன் வினோத், காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, தீபா, ரோஷினி ஹரிப்ரியன், சென்றாயன் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மதுரையின் கிராமத்து அழகையும், உணர்வையும் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். பின்னணி இசையால் படத்திற்கு துணை புரிகிறார் சந்தோஷ் நாராயணன். ‘பொட்டல மிட்டாய்’ பாடல் முனுமுனுக்கிறது. கவலை மறந்து சிரிக்கவும், சிந்திக்கவும் தக்க படமாக அமைந்திருக்கிறது.

குடும்பத்தோடு அமர்ந்து ருசிக்கலாம் இந்த கொத்து புரோட்டாவை

Leave A Reply

Your email address will not be published.