குடும்ப படங்கள் வரிசை கட்டும் டிரண்டிங் இப்போது. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் என்று நினைத்து பார்த்தால், அந்த வரிசையும் உண்டு. யாரும் எதிர்பாராத இன்னொரு வரிசையும் உண்டு.
நாயகன் தர்ஷனும், நாயகி அர்ஷாவும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து, ஒரு அப்பார்ட்மென்டில் சொந்தமாக பிளாட் வாங்கி குடியேறுகிறார்கள். சில நாட்களிலேயே அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறார்கள். ஆனால் அது பேய்களின் வேலை இல்லை. அதே வீட்டில் காளி வெங்கட்டும், அவரது மனைவி வினோதினியும் தங்கள் 10 வயது மகனுடன் வாழ்கிறார்கள்.
ஒரே வீட்டில் எப்படி இரண்டு குடும்பம் வாழ முடியும். காளி வெங்கட் வாழ்வது 2012ம் ஆண்டில், தர்ஷன் வாழ்வது 2022ம் ஆண்டில். உண்மையிலேய சுழலும் காலச் சக்கரத்தில் ஏற்பட்ட ஒரு சின்ன கோளாறுதான் இதற்கு காரணம். இதனை இரு குடும்பமும் எப்படி சரி செய்கிறது என்பதுதான் படத்தின் கதை.
கிறிஸ்டோபர் நோலன் ரேன்ஞ்சுக்கு இப்படி ஒரு கதையை யோசித்த இயக்குனர் டி.ராஜவேல் அதனை சுவாரஸ்மான திரைக்கதையில் தந்திருக்கிறார். ஜன்னல் திரை காற்றில் பறப்பது, நாற்காலிகள் தானாக ஆடுவது, குழாயில் தானாக தண்ணீர் விழுவது என வழக்கமான காட்சிகள் இருந்தாலும் அவற்றின் பின்னால் இருக்கிற விஷயம் புதிது என்பதால் ரசிக்க முடிகிறது.
கொஞ்சம் பயம், கொஞ்சம் திகில், கொஞ்சம் சென்டிமெண்ட் நிறைய காமெடி என மாஸ் எண்டர்டெயின்மெண்டாக படம் அமைந்திருக்கிறது.
தர்ஷனும், அர்ஷாவும் நிஜமான கணவன் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். காளி வெங்கட்டும், வினோதினியும் அனுபவ நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார்கள்.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை பயமுறுத்தவும் செய்கிறது, தாலாட்டவும் செய்கிறது. ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் இரண்டு குடும்பத்திற்கும் தனி தனி கலர் டோன் கொடுத்து கதை சொல்வதை எளிதாக்குகிறார்.
கொஞ்சம் பிசகினாலும் குழப்பம் தரும் திரைக்தையை நேர்த்தியாக செதுக்கி இருக்கிறார் எடிட்டர் ஏ.நிஷார் ஷரேப்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி. வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு உருவாகி உள்ளது இந்த ‘ஹவுஸ்மேட்ஸ்’. குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று இந்த ஹவுஸ்மேட்சை சந்தித்து மகிழலாம்.