‘குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்’ என்பார்கள். அதன்படி இந்த சமூகம் உருவாக்கிய அக்யூஸ்ட் கனகு (உதயா). குற்றம் அவனது வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கான தொழில். அவனுக்குள்ளும் பாசம், காதல், அன்பு எல்லாம் உண்டு.
தான் காதலித்த மலர்(ஜான்விகா கலகரி) இன்னொருவருக்கு மனைவியான பிறகும் அவளது குழந்தையை காப்பாற்றுவதற்காக செய்யாத கொலைக்காக சிறைக்கு செல்கிறார் கனகு. ஆனால் கொலை செய்த நிஜ குற்றவாளிகள் கனகுவை போட்டுதள்ள திட்டமிடுகிறார்கள். இதனால் சென்னை சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் தீர்த்துக்கட்ட ஆட்களை இறக்குகிறார்கள். போலீசும் எண்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறது. கனகுவை ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு கான்ஸ்டபிள் வேந்தனுக்கு(அஜ்மல்) தரப்படுகிறது.
இந்த பயணத்தில் கனகுவை கொல்ல துடிக்கும் கூட்டம், காப்பாற்றத்துடிக்கும் கான்ஸ்டபிள் வேந்தன், இவற்றுக்கு இடையில் கான்ஸ்டபிள் வேந்தன் தரப்பு சட்ட நியாயம், கனகு தரப்பு சமூக நியாயம் இவற்றை கலந்து பரபரப்பான ஆக்ஷன் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ்.
உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார், நடித்திருக்கிறார் உதயா. அவரது கேரியரில் இது முக்கியமான படம். கனகுவாகவே வாழ்ந்திருக்கிறார். மலரோடு காதல், கான்ஸ்டபிளோடு நட்பு, வில்லன்களோடு ஆக்ரோஷ மோதல் என முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.
பஸ்சுக்குள் நடக்கும் சண்டை காட்சியும், அதை படமாக்கி இருக்கும் விதமும் சிலிர்க்க வைக்கிறது. அஜ்மலும் உதயாவுக்கு ஈடுகொடுத்து நடிக்கிறார். பயமும், பதட்டமும் நிறைந்த ஒரு கான்ஸ்டபிளை கண்முன் நிறுத்துகிறார்.
நாயகி ஜான்விகா நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். கணவன், காதலன் இருவருக்கும் இடையில் கிடந்து தவிக்கிற பெண்ணின் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கனகுவின் அக்காவாக வரும் தீபா, விடுதி உரிமையாளர் யோகி பாபு ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நரேன் பாலகுமாரின் பின்னணி இசை பரபரப்பை கூட்டுகிறது. பாடல்களும் முனுமுனுக்க வைக்கிறது. மருதநாயகத்தின் ஒளிப்பதிவு இயக்குனரோடு இணைந்து கதை சொல்கிறது.
ஆங்காங்கே ‘கைதி’ மற்றும் ‘விடுதலை’ படத்தை நினைவூட்டினாலும் தனி ரூட்டில் பரபரவென பயணிக்கிறான் இந்த அக்யூஸ்ட்.