ஏஐ தொழில்நுட்ப காலத்தில் வந்து நின்றாலும் தமிழ்நாடு இன்னும் ‘ஏய் கீழ் ஜாதி பயலே’ என்கிற மன நிலையில்தான் இருக்கிறது. சில பல திட்டங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை அரசு உயர்த்த நினைத்தாலும் அதே அரசின் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறவர்கள் அவர்களை கொலை செய்தும், மிரட்டியும் தங்கள் ஜாதி ஆதிக்கத்தை பாதுகாத்து வருகிறர்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள், மக்கள் பிரதிநிதியாக தப்பித் தவறி வந்த பிறகும் அவர்களை அழித்தொழித்த பல சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி இருக்கிறது. அதில் ஒரு சம்பவத்தை தழுவி உருவாகி இருக்கிறது இந்தப் படம்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆதிக்க ஜாதி குடும்பமே தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து வருகிறது. இந்த நிலையில் அந்த தொகுதி பட்டியிலனத்தவருக்கு ஒதுக்கப்படுகிறது. ஆதிக்க ஜாதியின் வன்முறைக்கு பயந்து அந்த தேர்தலில் போட்டியிட்டு வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறாள் பட்டியல் இன பெண்ணான அமுதா. இந்த போட்டத்தில் அவள் சந்தித்த பிரச்சினைகள் என்ன? அவள் நினைத்ததை சாதித்தாளா என்பதுதான் படத்தின் கதை.
கதையின் நாயகி அமுதாவாக நடித்திருக்கும் மதுமிதா மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார். அமுதாவாகவே வாழ்ந்திருக்கிறார். நல்லவிதமாக உரிய இடங்களுக்கு படத்தை கொண்டு சென்றால் அவருக்கு விருது கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவர் தவிர படத்தில் நடித்திருக்கும் வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில்குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா ஆகியோரும் கதை மாந்தர்களாக உயிரோடு நடமாடுகிறார்கள். பிரவீனின் ஒளிப்பதிவும், ஹரி கிருஷ்ணனின் பின்னணி இசையும் படத்திற்கு உதவி இருக்கிறது.
பட்ஜெட் காரணமாக உருவாக்கத்தில் ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும், முதல் படத்திலேயே அழுத்தமான கதை களத்தில் சமூக கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்து தரமான இயக்குனராக தடம் பதிக்கிறார் வெண்பா கதிரேன். துணிச்சலாக இந்த படத்தை தயாரித்துள்ள ஸ்ரீதுர்கா கிரியேஷன்ஸ் வி.ரவிச்சந்திரனும் பாராட்டுக்குரியவர். நல்ல படத்தை ஆதரிப்பவர்கள், இந்த படத்தையும் ஆதரிக்க வேண்டும்.