‘படையாண்ட மாவீரா’வை யாராலும் வீழ்த்த முடியாது: இயக்குநர் கௌதமன் ஆவேசம்

வ. கௌதமன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’ சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.

வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் வாழ்க்கையை தழுவி தயாராகி இருக்கும் இந்த படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வரும் 19ம் தேதியன்று வெளியாகிறது.

இந்த படத்தின் அறிமுக நிகழ்வில் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குனர் கௌதமன் பேசியதாவது: ”என்னை வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திரைப்படத்திற்கு தயாரிப்பாளரான வி கே குழுமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி.ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.‌

இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.

அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள். படைப்புகளையும், படைப்பாளிகளையும் வீழ்த்த நினைத்து மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் அருவருப்பானவை. அதனைத் தவிர்த்து விடுங்கள்.

அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.