பெங்களூருவில் நாயகன் சன்னி (நஸ்லென்). வசிக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டுக்கு புதிதாக வரும் சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) கண்டதுமே காதல் கொள்கிறார். ஆனால் அவர் வழக்கத்துக்கு மாறான அமானுஷ்ய சக்தி கொண்ட பெண் என்பது தெரியவருகிறது.
சந்திரா யார்? அவருடன் இருப்பவர்கள் யார்? அவரிடம் இருக்கும் அமானுஷ்யம் என்ன? என்பது கதை.
பழமையான கிராமிய கதை ஒன்றை நவீனத்துடன் இணைத்து, பேன்டஸி அட்வென்சர், சூப்பர் ஹீரோ கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டொம்னிக் அருண். அதனால், லாஜிக் விஷயங்களை விட்டுவிட்டு கதையை, நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் வரும் சூப்பர் மேன், வெம்பயர் கதைகளுடன் நம்ம ஊர் நீலி கதையை, நம்பும்படியாக கொடுத்து மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படமாக தந்திருக்கிறார்கள்.
நண்பர்கள், பார்ட்டி, உடல் உறுப்புகள் திருடும் கும்பல் என செல்லும் முதல் பாதியில் சந்திரா, மர்மமானவர் என்பது தெரிந்த பிறகு, கதை விறுவிறுப்பாகிறது. அதற்கு ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் காரணம். ஒரு வித பயத்துடனும் ஏதோ நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்புடனும் கதைக்குள் இழுத்துப் போக வைக்கிறது இசை.தொழில்நுட்ப ரீதியாக மிரட்டும் இந்தப் படத்தில் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு தனித்துவமாகத் தெரிகிறது. திரைக்கதை சில இடங்களில் தொய்வடையும் போது, அதைக் கவனிக்க விடாமல் கதையோடு இழுத்துச் செல்லும் முயற்சிக்கிறது சாமன் சாக்கோவின் படத்தொகுப்பு.
சூப்பர் ஹீரோவாகவும் மர்ம பெண்ணாகவும் தனது உடல்மொழியில் வித்தியாசம் காட்டி, மிரட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். ஆக்ஷன் காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது. மொத்தக் கதையும் அவரைச் சுற்றிதான் என்பதால், அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்து நாச்சியப்பாவாக வரும் சாண்டி மாஸ்டருக்குத்தான் கதையில் முக்கியத்துவம். அவர் தோற்றமும் நடிப்பும் வில்லன் கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறது. அப்பாவியாக, பயந்துகொண்டே கல்யாணியுடன் செல்பவராக வரும் நஸ்லென், அவர் நண்பர்கள் அருண் குரியன், சந்து சலீம் குமார் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் பார்ன் வேர்ல்ட் தரத்தில் உருவாகி இருக்கும் பான் இந்தியா படம்.