மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னட நடிகை நீமா ரே இதில் நாயகியாக நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசியதாவது: படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார்.
படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர் ஒத்துழைப்பு தந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம்.
இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும், தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.
தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசியதாவது: வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார்.
ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார்.