எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு, ‘அங்கம்மாள்’ என்ற படம் உருவாகி இருக்கிறது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
அம்மா வேடங்களில் பிசியாக நடித்து வரும் கீதா கைலாசம், (இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகள்) இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத பெண்ணின் பார்வையில் இருந்து கதைக்களம் சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீதா கைலாசம் கூறும்போது, ‘‘ஜாக்கெட் அணியாத ஒரு தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பிள்ளைகளின் நிலைமை எதார்த்தம் கலந்து சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக ஜாக்கெட் அணியாமல் நடிக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டேன்.
அதேபோல கதாபாத்திரத்தின் தன்மைக்காக சுருட்டு பிடிக்கவும் கற்றுக்கொண்டேன். இதற்காக என் குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை. நல்ல கதைக்காக எதையும் அர்ப்பணிப்புடன் செய்யலாம் என்ற என் எண்ணத்துக்கு மதிப்பு தருபவர்கள் என்பதால், என்னால் இதை சுலபமாக கடந்துசெல்ல முடிந்தது. இந்த கதை உணர்வுகளின் வெளிப்பாடு”, என்றார்.