குடும்ப பிரச்சினைகளை பேசும் ‘மிடில் கிளாஸ்’

முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. விஜயலட்சுமி அவர் மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற 21ம் தேதி படம் வெளிவருகிறது.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கி உள்ள இந்த படத்தை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “ஒரு குடும்பத்தில் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன்- மனைவி பற்றிய படம் இது.முனீஷ்காந்த் – விஜயலட்சுமி கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

முனீஷ்காந்த்துக்கு கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ ஆசை. விஜயலட்சுமி நகரத்திலேயே வசதியாக வாழ நினைக்கிறார். இதனாலேயே இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன்.

முதலில் குடும்ப கதையாகச் செல்லும் படம் பின்னர் வேறு டிராக்குக்கு மாறும். முனீஷ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது தயங்கினார். இந்த கதாபாத்திரம், குணச்சித்திரம், காமெடி, சென்டிமென்ட் என எல்லா பரிமாணங்களும் கொண்டது. இதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று விளக்கியதும் சம்மதித்தார். பார்வையாளர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.