பல வெற்றிப் படங்களின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய கோபியின் மகன் ஹீரோவாகி இருக்கும் படம். முகம் தெரியாமல் பணியாற்றியவர் முதல் படத்திலேயே தனது மகன் ஆதவ் கிருஷ்ணாவை தெரிய வைத்திருக்கிறார். பெரிய அதிரடி ஆக்ஷன் படமாக இல்லாமல் அழகான காதல் கதை மூலம் அறிமுகமாகி இருக்கிறார் ஆதவ்.
படத்தின் கதை இதுதான்…
ஹீரோ ஆதவ் கிருஷ்ணாவும், ஹீரோயின் சிம்ரன் அத்வானியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள், காதலிக்கிறார்கள். பெரும் பணக்காரரான சிம்ரன் அத்வானியின் அப்பாவிற்கு ஆதவ் கிருஷ்ணாவை பிடிக்கவில்லை.
தனது தந்தையை விட்டு பிரிந்து காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவ் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைக்க ஆதவை அழைத்து கொண்டு காசிக்கு செல்கிறார் சிம்ரன். சென்ற இடத்தில் சிம்ரன் காணாமல் போய் விடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது. சிம்ரன் எங்கே போனார், என்ன ஆனார் என்பதே படத்தின் கதை.
முன்பகுதி வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், பின் பகுதி காசியில் ஆக்ஷன் படமாகி விறுவிறுப்பு கூட்டுகிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, அதனை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். ஹீரோயின் சிம்ரன் அத்வானி காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆதவ் கிருஷ்ணா ஒரு ரவுண்டு வருவார். அதற்கான அறிகுறிகள் படத்தில் தெரிகிறது. காதலர் மாதத்தில் வந்திருக்கும் அழகான காதல் படம்.