மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ள படம் 4த் ஃப்ளோர். இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி இயக்கியுள்ளார் தரண் இசை அமைத்துள்ளார். ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 27ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் ஆரி பேசியதாவது:
இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும். தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.
பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.
இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.