கொலைச்சேவல்: மனதை பதற வைக்கும் ஆணவக் கொலை

ஆணவக் கொலை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், ரத்தமும், சதையுமாக வந்திருக்கும் படம் இது. வெவ்வேறு ஜாதியை சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். அனு கருவுற்று இருப்பதனால், காளியின் குடும்ப வழக்கப்படி அவர்களுடைய குலதெய்வமான நிறைசூழி கோயிலுக்குச் சேவலைப் பலிகொடுக்கப் புறப்படுகிறார்கள். அவர்களை ஆணவக் கொலை செய்ய ஒரு கூட்டமும் பின்னாலேயே செல்கிறது. அடர்ந்த காட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

மனைவி மீது அதீத பாசம், அவரை காப்பாற்ற போராடும் வேகம் என கலையரசன் குறையின்றி நிறைவாக செய்திருக்கிறார். பதைபதைப்பு, நடுக்கம் என நடிப்பில் கதாபாத்திரத்தின் அழுத்தத்தைக் கூட்டி அனுதாபத்தைப் பெற்றிருக்கிறார் தீபா பாலு. வசனமின்றி, படம் முழுக்க இறுக்கமான முகம் காட்டி வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார் கஜராஜ். இவர்களைத் தாண்டி, பாலசரவணன், அகரன் வெங்கட், விஜய் சத்யா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள், நிறைந்து காணப்படும் பச்சை நிற எழில், பாறைகளில் தேங்கி நிற்கும் சுனை நீர் என ஜவ்வாது மலையின் அழகியலைப் பதைபதைப்பிற்கு ஏற்றபடி பதிவு செய்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் கேமரா. இசையமைப்பாளர் சாந்தன் அமைத்திருக்கும் ‘பிஞ்சு விரல் பாதம் இரண்டு’ என்கிற பாடல் க்ளைமாக்ஸ் காட்சியின் அடர்த்தியைக் கூட்டுகிறது. பின்னணி இசையும் காட்சிகளின் பதைபதைப்போடு நம்மை கட்டிப் போடுகிறது.

நல்லதொரு மேக்கிங் , அடர்த்தியான திரைமொழி படத்தை தாங்கி பிடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.