போலீஸ் உயர் அதிகாரி மதுசூதனன் ராவ் மகள் சேஷ்விதா கனிமொழி கடத்தி, கொல்லப்படுகிறார். கதையின் நாயகன், புட் டெலிவரி பாய் தருண் விஜய் மீது போலீசுக்கு சந்தேகம் வர, அவரை விசாரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் ராம்ஸ்தான் கொலையாளி என்று முடிவு செய்து, ஹீரோவை அப்பாவி என நினைத்து விடுவிக்கிறார்கள்.
சில நாட்கள் கழித்து அந்த கொலையை நான்தான் செய்தேன். இன்னும் 2 கொலை செய்து இருக்கிறேன் என போலீசில் சரண்டர் ஆகிறார் ஹீரோ. அவருக்கு மனநிலை பாதிப்போ என நினைக்கிற வேளையில், சேஷ்விதா உயிரோடு மீட்கப்படுகிறார். நாயகன் தருண் விஜய் யார்? உண்மையில் யார் கொலையாளி என்பதுதான் படத்தின் கதை.
புதுமுக ஹீரோ தருண் விஜய் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அப்பாவித்தமான முகம், திடீரென வேறொரு முகம் காட்டுவது, கோர்ட் காட்சிகளில் அசுரத்தனமான நடிப்பு என தனது வருகையை பலமாக்கி இருக்கிறார். வில்லனாக வரும் நான் மகான் அல்ல ராம்ஸ் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். ஹீரோ அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, ஹீரோயின் அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ராஜ்குமார் பாசத்தில் உருகி இருக்கிறார்கள்.
கோலிசோடா உட்பட பல படங்களில் வில்லனாக பார்த்த மதுசூதனன்ராவ் இதில் நல்ல அப்பா. அவர் மகளாக வரும் ஹீரோயின் சேஷ்விதாநடிப்பில் குறையொன்றுல்லை. பாசக்கார மகளாகவும், கிளைமாக்சில் இன்னொரு பரிமாணத்திலும் நடித்து தன் இருப்பை உறுதி செய்கிறார்.
போலீஸ் விசாரணை காட்சிகள், கொலை நடக்கும் அந்த சின்ன அறை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் திறமை தெரிகிறது. அப்பா, மகள் பாசப்பாடலை அழகாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கரண் பி கிருபா.ஒரு கொலை, அடுத்து 2 கொலைகள், அதற்கடுத்து டுவிஸ்ட் என வேகமாகவும், விறுவிறுப்பாக வேகமெடுக்கிறது படம். கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து.