சூவ்வொரு ஊரிலும் இருக்கும் எல்லைச் சாமிகள் சாதரண சிலைகள் அல்ல. அவைகள் மக்களை காக்கும் அவதாரங்கள் என்பதை சொல்லும் பக்தி கலந்த பக்கா ஆக்ஷன் படம். மகள் அறுவை சிகிச்சைக்காக, கேரளாவிலிருந்து சென்னை வருகிறார்இந்திரன்ஸ். சிகிச்சைக்காக அவர்கள் கொண்டு வந்த நகையை திருடி விடுகிறார்கள். திருடிய நகையை கைப்பற்றும் போலீசார். அதில் பாதி நகையை ஆட்டையபோட்டுவிட்டு மீதியை கொடுக்கிறார்கள்.
இதனால் அனைத்து நகை¬யும் மீட்க நீதிமன்றம் செல்கிறார் இந்திரன் ஆனால், அங்கு அநீதிக்குத் துணைபோகும் வழக்கறிஞராக இருக்கும் பேபி கண்ணன் (ஆர்.ஜே.பாலாஜி) பினுவின் தந்தையுடைய அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற நினைக்கிறார். பேபி கண்ணன் தொடர்ந்து தங்களை அலைக்கழிப்பதால் மகளும் இறந்து விடுகிறார். இதனால் இந்திரன்ஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள கருப்பு சாமியிடம் முறையிடுகிறார். கருப்பன் சூர்யாமூலமாக வந்து ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படம்.
வேட்டை கருப்பு அவதாரத்தில் வந்திறங்கி நடிப்பில் சூர்யா ஆடியிருப்பது சரியான ஆட்டம். மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். மக்களின் துன்பங்களைக் கண்டு துடிப்பவராக எமோஷனல் எல்லையிலும், அவர்களுக்காக நீதி பெற்றுத்தர ஆக்ஷன் எல்லையிலும் சூர்யா தந்திருப்பது நல்ல சாமி தரிசனம். வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி, காமெடிகளைக் துணைக்கு வைத்துக் கொண்டு நடிப்பில் தேவையான மீட்டரைக் குறைவின்றித் தந்திருக்கிறார். கருப்பனின் ஆட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் த்ரிஷா, கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
ஏமாற்றுபவர்கள் குணம் அறியாமல் அனைத்தையும் அப்பாவித்தனத்துடன் கையாள்பவராக தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார் இந்திரன்ஸ். படத்தின் எமோஷனல் கட்டடத்திற்குத் தூணாகவும் இருந்திருக்கிறது இந்திரன்ஸின் நடிப்பு. இதற்கு அனகா ரவியும் உதவியாக இருந்து, கதாபாத்திரம் கோரும் அழுத்தத்தைத் தாராளமாகத் தந்திருக்கிறார். ஊழல் கரை படிந்த கோட் அணிந்து வரும் நீதிபதியாக நட்டி சுப்பிரமணியம் நம் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இவர்களைத் தாண்டி ஸ்வாசிகா, ஷிவதா, நமோ நாராயணா, மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், லொள்ளு சபா மாறன் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கருப்பனின் ஆட்டத்தைப் பிரமாண்டத்தோடு திரைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு. ஆவேசத்தையும், ஆசுவாசத்தையும் இசையால் தந்திருக்கிறார் சாய் அபயங்கர். நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்காகக் கருப்பனே வந்திறங்கி நீதி பெற்றுத் தரும் கதையைப் ஃபேண்டஸியைக் கலந்த கமர்ஷியல் கதையாக தந்திருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. கருப்பனை கொண்டாடலாம், ரசிக்கலாம், வணங்கவும் செய்யலாம்.